பொள்ளாச்சி-திருச்செந்தூர் ரெயில் சேவை தள்ளிவைப்பு


பொள்ளாச்சி-திருச்செந்தூர் ரெயில் சேவை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 10:11 PM IST (Updated: 15 Dec 2021 2:28 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி-திருச்செந்தூர் ரெயில் சேவை தொடங்குவது தள்ளி வைக்கப்படுகிறது. ரெயில் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

பொள்ளாச்சி,
 
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை,பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் பொள்ளாச்சி-திருச்செந்தூர் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்றும், பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு நாளையும் இயக்கப்படுவதாக இருந்தது.

இந்த ரெயிலில் செல்வதற்கு பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயிலும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலக்காட்டில் இருந்து மறைமுகமாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்குவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் போராட்டம் நடத்துவதற்கு பயணிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி-திருச்செந்தூர் ரெயில்சேவை தொடங்குவது தள்ளி வைக்கப்படுகிறது. ரெயில் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தை புறக்கணிக்கும் வகையில் பொள்ளாச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் மறைமுகமாக பாலக்காட்டில் இருந்தே இயக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் முழுவதும் முன்பதிவு ரெயில் பெட்டிகள் மட்டும் இணைக்கப்பட்டு உள்ளன.
இதனால் முன்பதிவு இல்லாமல் ரெயிலில் செல்ல முடியாது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. 


ஒரு நாளைக்கு முன்பாக முன்பதிவு செய்தால் மட்டுமே மறுநாள் காலையில் ரெயிலில் செல்ல முடியும். எனவே சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் முன்பதிவு செய்து ரெயிலில் செல்வது என்பது சாத்தியம் இல்லாதது. வேண்டும் என்றே திட்டமிட்டு பாலக்காடு கோட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. தற்போது ரெயில்சேவை தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
எனவே மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூர் ரெயிலை இயக்க வேண்டும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பொள்ளாச்சியை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரையுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
1 More update

Next Story