ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தில் அரசு பஸ் சிக்கியது; போக்குவரத்து நெரிசல்- மேம்பாலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஈரோட்டில் ரெயில்வே நுழைவு பாலத்தில் அரசு பஸ் சிக்கியது; போக்குவரத்து நெரிசல்- மேம்பாலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2021 2:33 AM IST (Updated: 15 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ரெயில்வே நுழைவுபாலத்தில் அரசு பஸ் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு
ஈரோட்டில் ரெயில்வே நுழைவுபாலத்தில் அரசு பஸ் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரெயில்வே நுழைவுபாலம்
ஈரோடு காளைமாடு சிலை -கொல்லம்பாளையம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. கரூர் மற்றும் காங்கேயம் சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் இந்த நுழைவு பாலம் வழியாக ஈரோட்டுக்குள் நுழைகின்றன. ஈரோட்டில் இருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களும் இந்த நுழைவு பாலம் வழியாக செல்கின்றன.
நுழைவு பாலத்தில் 3 பாதைகள் உள்ளன. மாநகர் பகுதியில் இருந்து வாகனங்கள் செல்ல, தாழ்வான நுழைவு பாலத்தில் ஒரு பகுதி பயன்படுத்தப்படுகிறது. வாகனங்கள் உள்ளே வரும்போது கனரக வாகனங்கள் வருவதற்கு தாழ்வான பகுதியில் இன்னொரு பாதை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோல் உயரமாக உள்ள சாலையில் சிறிய ரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பஸ் சிக்கியது
இந்தநிலையில் நேற்று அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று அந்த ரோட்டில் காலை 9.15 மணி அளவில் நுழைந்தது. நுழைவு பாலத்தில் பாதுகாப்புக்காக போடப்பட்டு உள்ள இரும்பு நுழைவு தடுப்பினையும் தாண்டிய அந்த பஸ் நுழைவுபாலத்தை கடந்தபோது பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது. பஸ்சின் மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருந்த ‘கேரியர்’ பாலத்தில் சிக்கியது. இதனால் பஸ்சை மேற்கொண்டு இயக்க முடியாமல் டிரைவர் திணறினார். பஸ்சில் இருந்த பயணிகளும் திகைத்தனர்.
பஸ் நுழைவு பாலத்துக்குள் சிக்கிய சில நிமிடங்களிலேயே அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மீட்பு
இந்த தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர், சூரம்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நீண்ட நேரம் பஸ்சை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. கடைசியில் பஸ்சின் சக்கரங்களில் இருந்து சம அளவில் காற்று இறக்கப்பட்டது. அப்போது பஸ்சின் உயரம் குறைந்து, பாலத்துக்கும் பஸ்சுக்கும் இடைவெளி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பஸ் மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேம்பாலம்
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
ஈரோடு மாநகரின் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த ரெயில்வே நுழைவுபாலம் உள்ளது.
வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகன டிரைவர்கள் பல நேரம் மேடான சாலை வழியாக நகருக்குள் நுழைய முயல்வது உண்டு. அப்போது ரெயில்வே தண்டவாளம் அமைந்திருக்கும் பாலத்தில் வாகனங்கள் மோதிவிடாமல் இருக்க, சற்று தூரத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பு நுழைவாயிலிலேயே அந்த வாகனங்கள் திரும்ப சென்று விடும். இவ்வாறு சற்று தூரம் வாகனங்கள் வந்து மீண்டும் ‘ரிவர்ஸ்’ சில் செல்லும்போது சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். சில நேரங்களில் இரும்பு தடுப்பில் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுவதும் உண்டு. பொதுவாக அனைத்து கனரக வாகனங்களும் தாழ்வான பாதை வழியாக வருவதால், மேடான சாலை நெரிசல் இன்றி இருக்கும். அதுவே வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் நுழைய காரணமாகவும் உள்ளது.
சாதாரண நாட்களிலேயே இங்கு போக்குவரத்து நெரிசல் மிகவும் கடுமையாக உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் கடந்து செல்ல பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக உள்ளது. இதனை செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story