1,498 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 21,985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடி கடன்-நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
1,498 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடி மதிப்பிலான கடன்-நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு
1,498 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடி மதிப்பிலான கடன்-நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி, ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 1,498 சுய உதவி குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடியே 15 லட்சம் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சுய உதவிக்குழு
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழக அரசு 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சுய உதவி குழுக்களை அமைக்க தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக, முன்னாள் முதல் -அமைச்சர் மு.கருணாநிதியின் தொலைநோக்கு பார்வையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரை கொண்டு சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
ரூ.67 கோடி கடன்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக்குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புதன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஆகிய 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதுவரை சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி வங்கி கடனாக வழங்கப்பட்டு, ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிசெய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) 1,498 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 21 ஆயிரத்து 985 உறுப்பினர்களுக்கு ரூ.67 கோடியே 15 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. கடன் உதவித்தொகைகளை பெறுகின்ற பெண்கள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வில் உயர வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் என்ற சிறப்பான திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 83 ஆயிரத்து 350 பேர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு அருகே உள்ள சோலார் பகுதியில் மிக விரைவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுபாலன், ஊராட்சி குழு தலைவர் நவமணி, மகளிர் திட்ட இணை இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story