பாம்பு குறுக்கே வந்ததால் தடுமாறி ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது: கர்ப்பிணி சாவு; கணவர் உயிர் தப்பினார்- மகளின் சாவில் சந்தேகம் என தந்தை போலீசில் புகார்
பாம்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது. இதில் கர்ப்பிணி மனைவி தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணவர் உயிர் தப்பினார். சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னிமலை
பாம்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது. இதில் கர்ப்பிணி மனைவி தண்ணீரில் மூழ்கி இறந்தார். கணவர் உயிர் தப்பினார். சாவில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கர்ப்பிணி
சென்னிமலை அருகே உள்ள எம்.பி.என். காலனி சரவணாபுரியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 28). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சுமித்ரா (24). ஐ.டி.ஐ. படித்து உள்ளார். இவர்களுக்கு 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. சுமித்ரா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமாரும், சுமித்ராவும் சென்னிமலை அருகே ஓட்டக்குளம் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் துணி துவைப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றார்கள். சுமித்ரா ஸ்கூட்டரின் பின்னாடி அமர்ந்திருந்தார்.
வாய்க்காலில் பாய்ந்தது
வாய்க்கால் கரையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய ஸ்கூட்டர் வாய்க்காலில் பாய்ந்தது.
சதீஷ்குமார் நீந்தி கரைக்கு வந்துவிட்டார். சுமித்ராவை தண்ணீர் அடித்து சென்றுவிட்டது. உடனே சதீஷ்குமார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடல் மீட்பு
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி சுமித்ராவை தேடினார்கள் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்குள் இருள் சூழ்ந்துவிட்டதால் தேட முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று மீண்டும் வாய்க்காலில் சுமித்ராவை தேடும் பணி நடைபெற்றது. அப்போது சுமித்ரா விழுந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் அவரின் உடலையும், ஸ்கூட்டரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள்.
சாவில் சந்தேகம்
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்தநிலையில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுமித்ராவின் தந்தை திருப்பூர் மாவட்டம் மணியம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அப்போது இருதரப்பு உறவினர்கள் சுமார் 150 பேர் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் திரண்டுவிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முறையான விசாரணை நடைபெறும் என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்கள்.
விசாரணை
குறுக்கே பாம்பு வந்ததால்தான் வாய்க்காலுக்குள் தடுமாறி விழுந்துவிட்டதாக போலீசில் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அதனால் அதுதான் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சுமித்ராவுக்கும், சதீஷ்குமாருக்கும் திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
கணவரோடு ஸ்கூட்டரில் சென்ற கர்ப்பிணி வாய்க்காலில் விழுந்து இறந்தது அவருடைய உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story