புஞ்சைபுளியம்பட்டி அருகே பயங்கரம்; தொழிலாளி அடித்து கொலை- தலைமறைவான 2 பேருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிவாளால் தாக்குதல்
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி குரும்பபாளையம் ராசாத்தி தோட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 30). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் தாய் ராசாத்தி, தம்பி சாமிநாதன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் உறவினர் மணி (40), கதிரான் (30) ஆகியோருக்கும், அண்ணாமலைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் அரிவாளின் பின்பக்கத்தை கொண்டு அண்ணாமலையின் நெஞ்சு பகுதியில் மணியும், கதிரானும் அடித்ததாக கூறப்படுகிறது.
படுக்கையில் பிணமானார்
இதை அறிந்த ராசாத்தி, சாமிநாதன் ஆகியோர் அங்கு வந்து சண்டையை விலக்கியுள்ளனர். பின்னர் அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
இதைத்தொடர்ந்து இரவு சாப்பிட்டுவிட்டு அண்ணாமலை தன்னுடைய அறைக்கு தூங்கச்சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் ராசாத்தி மகனை எழுப்புவதற்காக அவருடைய அறைக்கு சென்றார். பின்னர் மகனை தட்டி எழுப்பினார். ஆனால் அவர் அசைவின்றி படுக்கையில் கிடந்தார். அப்போதுதான் அண்ணாமலை இறந்துவிட்டது ராசாத்திக்கு தெரிய வந்தது. அவர் கதறி துடித்தார்.
இதுபற்றி உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வலைவீச்சு
தகவலின்பேரில் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அண்ணாமலையின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அண்ணாமலையை தாக்கிய மணியும், கதிரானும் தலைமறைவாகிவிட்டார்கள்.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணி, கதிரானை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story