தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உள்பட 3 பேர் கைது
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து கைதான 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து கைதான 3 பேரும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தொழிலாளி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி குரும்பபாளையம் ராசாத்தி தோட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 30). கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருடைய அக்காள் ராணி. அவருடைய கணவர் மணி (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்தநிலையில் மணி (40), அவரது உறவினர் கதிரான் (30) ஆகியோருக்கும், அண்ணாமலைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டார்கள். அந்த நேரத்தில் அரிவாளின் பின்பக்கத்தை கொண்டு அண்ணாமலையின் நெஞ்சு பகுதியில் மணியும், கதிரானும் அடித்ததாக கூறப்படுகிறது.
பிணமாக கிடந்தார்
இதை அறிந்த அண்ணாமலையின் தாய் ராசாத்தி அங்கு வந்து சண்டையை விலக்கியுள்ளார். பின்னர் அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இரவு சாப்பிட்டுவிட்டு அண்ணாமலை தன்னுடைய அறைக்கு தூங்கச்சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் அண்ணாமலை பிணமாக கிடந்தார். இதுகுறித்து அண்ணாமலையின் தாய் ராசாத்தி புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராணி, மணி, கதிரான் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 3 பேரும் விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நிற்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் ராணி போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
திருமணத்தில் உடன்பாடு இல்லை
எனது மகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லாததால் அவர் வரவில்லை. இதனால் அண்ணாமலைக்கும், எனக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு என் மகள் திருமணம் குறித்து அண்ணாமலை என்னிடம் பேசினார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்து நான், அருகில் இருந்த மணி, கதிரான் ஆகியோர் அண்ணாமலையை தாக்கினோம். இதை பார்த்த எனது தாய் ராசாத்தி வந்து எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
கைது
அதைத்தொடர்ந்து அண்ணாமலை வீட்டு்க்கு சென்று இரவில் தூங்கினார். மறுநாள் எனது தாய் ராசாத்தி அவரை எழுப்பியபோது அண்ணாமலை உயிரிழந்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த நான், என்னுடைய கணவர் மணி, கதிரான் ஆகியோர் வெளியூர் செல்ல விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தத்துக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த போலீசார் அண்ணாமலையை கொலை செய்ததாக எங்களை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறினார்.
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
----
Related Tags :
Next Story