விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவில் விபத்துகளை தடுக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இன்னுயிர் காப்போம் திட்டம்
மத்திய, மாநில அரசுகள் சார்பில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் விபத்துகள் நடைபெறும் பகுதிகளில் குறியீடு அமைத்தல், கூகுள் வரைபடம் மூலமாக அந்த பகுதிகளை குறியிட்டு, அங்கு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக தமிழக அரசு இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்துகளை தடுக்க வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று ஆனைமலை, கிணத்துக்கடவிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
13 இடங்கள் தேர்வு
தமிழக அரசு இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திற்கு 50 இடங்களை விபத்து அதிகமாக நடைபெறும் இடங்களான தேர்வு செய்து உள்ளது. அதன்படி பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்லடம் ரோடு, ராஜாமில் ரோடு, திப்பம்பட்டி, கோவில்பாளையம், அம்பராம்பாளையம், மீனாட்சிபுரம், ஆவல்சின்னாம்பாளையம் உள்பட 13 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
மேம்பாட்டு பணிகள்
இந்த பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் விபத்துகளை தடுக்க நிரந்தர மற்றும் தற்காலிக தீர்வு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைத்தல், சாலையின் நடுவில் தடுப்புகள் அமைத்தல், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதையடுத்து அரசு உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story