வீடு, கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி


வீடு, கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Dec 2021 12:44 AM IST (Updated: 16 Dec 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே வீடு, கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு வயலப்பாடி கிராமத்தில் அரியலூர்-திட்டக்குடி  அருகே வீடு உள்ளது. ஆனால், ராமன் 10 வீடுகள் தள்ளியுள்ள மற்றொரு வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மெயின் ரோடு அருகே உள்ள ராமன் வீட்டின் பின்புற கதவை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
ஆனால், அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் அருகே உள்ள ரமேஷ் (45) என்பவரது மளிகைக் கடையின் முன்பக்க இரும்பு கதவு மற்றும் மரக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
தப்பி ஓட்டம்
அப்போது கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு சுப்பிரமணியன் என்பவர் திடுக்கிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றதை கண்டு திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அவரது கூச்சலை கேட்டு அருகில் உள்ளவர்கள் எழுந்து ஒன்று கூடினர். பொதுமக்களை பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் வயலப்பாடி முழுவதும் தேடியும்  சிக்கவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குன்னம் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story