குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி,
மொடக்குறிச்சி அருகே உள்ள குலவிளக்கு கிராமம் சின்னுச்சாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதன் (வயது 50). பந்தல் போடும் தொழிலாளி. அவருடைய மனைவி பெருமாயி (46). இவர்களுக்கு மலர்க்கொடி (23) என்ற மகளும், பிரதாப் (21) என்ற மகனும் உள்ளனர்.
வரதனுக்கும், பெருமாயிக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாயி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீடான கருக்கம்பாளையத்திற்கு சென்றுவிட்டார்.
அதன்பின்னர் வரதன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருக்கம்பாளையம் சென்று தனது மனைவியிடம் சமாதானம் பேசி சின்னுச்சாமிபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மலர்க்கொடியின் பிறந்தநாளையொட்டி இறைச்சி எடுத்து வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு் கொண்டிருந்தனர்.
அப்போது வரதன், பெருமாயிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வரதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பெருமாயியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவருக்கு ரத்தம் பீறிட்டு் வந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி அவர் கீழே சாய்ந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் பரதன் அரிவாளை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பெருமாயியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பித்து ஓடிய வரதனை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story