செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை விரட்டிய யானை
சத்தி அருகே செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற வாலிபர்களை யானை விரட்டியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் தமிழ்நாடு-கர்நாடகா மாநிலத்தை இணைக்கும் சத்தி-மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து யானைகள் வந்து அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் பண்ணாரி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தது. அப்போது சத்தியமங்கலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்கள்.
யானையை பார்த்ததும் அவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார்கள். பின்னர் யானை அருகே சென்று 2 பேரும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது ஆவேசமடைந்த யானை 2 பேரையும் துரத்தியது. இதனால் 2 பேரும் மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார்கள்.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது ‘வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பது மற்றும் விலங்குகளை சீண்டுவது போன்ற செயல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்படுகிறார்கள்’ என்றனர்.
Related Tags :
Next Story