2 வக்கீல்கள் தொழில் செய்ய தடை; பார் கவுன்சில் நடவடிக்கை


2 வக்கீல்கள் தொழில் செய்ய தடை; பார் கவுன்சில் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2021 3:04 PM IST (Updated: 16 Dec 2021 3:04 PM IST)
t-max-icont-min-icon

2 வக்கீல்கள் தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

பூந்தமல்லியை சேர்ந்த வக்கீல் விமல்குமார் மீது பார் கவுன்சிலில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், மனநலம் குன்றிய தன் மகனுக்கும், தனக்கும் கொலை மிரட்டல் விடுத்து பெருந்தொகை பணமும், தங்கநகைகளையும் விமல்குமார் பெற்றுக் கொண்டதாகவும், தன் கணவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்து ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறி இருந்தார். இதையடுத்து வக்கீல்கள் விமல்குமார், பழனி ஆகியோர் பூந்தமல்லி பார் அசோசியேசன் அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், அசோசியேசனின் செயலாளரை அவதூறாக பேசி, தாக்கியுள்ளார். பார் கவுன்சில் தலைவரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் நாயக்கன்பேட்டையை சேர்ந்தவர் இளையராஜா. இவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து கொண்டே சட்டப்படிப்பை படித்துள்ளார். இந்த உண்மையை மறைத்து, பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். தற்போது முழு நேர டாஸ்மாக் ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். இதையடுத்து விமல்குமார், இளையராஜா ஆகியோர் வக்கீல் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தகவல்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.


Next Story