சென்னை விமான நிலையத்துக்கு தாம்பரம் வழியாக வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் மீண்டும் திறப்பு
சென்னை விமான நிலையத்துக்கு தாம்பரம் வழியாக வரும் வாகனங்களுக்கான நுழைவு நுழைவு வாயிலை மீண்டும் திறக்க விமான நிலைய ஆணையகம் அனுமதித்தது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கிண்டி வழியாக செல்லும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாகவும், தாம்பரம், பல்லாவரம் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்பட்டன.
2020-ம் ஆண்டு மாா்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக தாம்பரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் மூடப்பட்டது. இதனால் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள், பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும். இதனால் சுமாா் 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. அத்துடன் உள்நாட்டு விமான நிலையத்தை கடந்து வரும்போது சிலநேரங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீஸ் நிலையம் அருகே மூடி வைக்கப்பட்ட நுழைவு வாயிலை மீண்டும் திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் கடந்த 22 மாதங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த போலீஸ் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயிலை மீண்டும் திறக்க விமான நிலைய ஆணையகம் அனுமதித்தது. அதன்படி நேற்று மாலை முதல் அந்த நுழைவு வாயில் திறந்து விடப்பட்டது. இதனால் தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள், இனி போலீஸ் நிலையம் அருகே உள்ள நுழைவு வாயில் வழியாக பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story