ஆனைமலை ரோடு நிலையத்தில் நிற்காமல் செல்லும் திருச்செந்தூர் ரெயில்

ஆனைமலை ரோடு நிலையத்தில் நிற்காமல் செல்லும் திருச்செந்தூர் ரெயில்
பொள்ளாச்சி
ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரெயில் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாலக்காடு கோட்டம் தொடர்ந்து தமிழக பகுதிகளை புறக்கணிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஆனைமலை ரோடு ரெயில் நிலையம்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பஸ்சை விட கட்டணம் குறைவு என்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கிடையில் கொரோனா காரணமாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் கோரிக்கையை பரிசீலனை செய்யாமல் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் திருச்செந்தூர் ரெயில்வே அட்டவணையில் ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் இல்லை. இதேபோன்று பாலக்காடு கோட்டத்தில் இருப்பதால் பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கோரிக்கை புறக்கணிப்பு
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்குவதால் ரெயில்வே துறைக்கு எந்த பயனும் இல்லை. இதே மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கினால் தென்மாவட்ட மக்கள் ஏராளமானோர் இந்த ரெயில் சேவை பயன்படுத்த முடியும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இதுதொடர்பாக தென்மாவட்ட மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் பயணிகள் ரெயிலாக இயக்கப்பட்ட போது திருச்செந்தூர் செல்ல கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. தற்போது அந்த ரெயில் சேவை இல்லை. மேலும் பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் தமிழக எல்லை வரை பாலக்காடு, பாலக்காடு நகரம், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன.
இந்த ரெயில் நிலையங்கள் அனைத்தும் திருச்செந்தூர் ரெயில் அட்டவணையில் உள்ளது. ஆனால் தமிழக பகுதியில் உள்ள ஆனைமலை ரோடு ரெயில் நிலையம் இடம்பெறவில்லை. இதனால் மாசாணியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் ஆனைமலை, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தென்மாவட்ட மக்கள் பொள்ளாச்சிக்கு வந்து திருச்செந்தூர் ரெயிலில் பயணம் செய்ய வேண்டி உள்ளது. பாலக்காடு கோட்டம் தொடர்ந்து தமிழக பகுதிகளை புறக்கணித்து வருகிறது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வாக பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளை பிரிக்க வேண்டும். மேலும் ஆனைமலை ரோடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்லவும், திருச்செந்தூர் ரெயிலுக்கு கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரு இணைப்பு ரெயில் விடவும் தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






