ரூ.1¼ கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.1¼ கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.1¼ கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
4 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு
கோவையில் குடியிருப்பு பகுதிகளில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் ரிசர்வ் சைட்டுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர். அதன்படி கோவை மத்திய மண்டலம் ராமநாதபுரம் 80 அடி சாலையை அடுத்த ஆறுமுக நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 சென்ட் நிலம் மற்றும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.
அங்கு தகர ஷெட் அமைத்து, பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நில விவகாரம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இதன் முடிவில், அது மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு வார காலத்திற்குள் நிலத்தை காலி செய்யுமாறு ஆக்கிரமிப்பு செய்திருந்தவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
அறிவிப்பு பலகை
இதைத்தொடர்ந்து நகரமைப்பு திட்ட அதிகாரி கருப்பாத்தாள் அறிவுறுத்தலின்பேரில் உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் ஜெயின் ராஜ், ராமநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்த தகர ஷெட் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. உடனே அங்கு வந்த அதன் உரிமையாளர் தாமாகவே பொருட்களை எடுத்து செல்வதாக கூறி ஆக்கிரமிப்புகளை காலி செய்தார். அதன்பின்னர் அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ரூ.1¼ கோடி மதிப்பு
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மீட்கப்பட்ட 4 சென்ட் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது.
தற்போது மீட்கப்பட்டுள்ள இந்த நிலத்தை சுற்றி கம்பிவேலி அமைக்கப்படும். மேலும் இந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மற்றொரு இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது, அந்த இடம் விரைவில் மீட்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story