கால்நடைத்துறையில் 1,150 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்


கால்நடைத்துறையில் 1,150 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 17 Dec 2021 12:00 AM IST (Updated: 17 Dec 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

கால்நடைத்துறையில் காலியாக இருக்கும் 1,150 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வாலாஜா

கால்நடைத்துறையில் காலியாக இருக்கும் 1,150 மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கால்நடை மருந்தகம் திறப்பு

வாலாஜா ஒன்றியம் அனந்தலை ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்க உரையாற்றினார். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடை மருந்தகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினர். 

மேலும்  கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் தொடங்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

1,150 பணியிடங்கள் 

அமைச்சர் காந்தி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவித்தார். மருத்துவர்களை தேர்ந்தெடுப்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கு தீர்வுகாண முதல்-அமைச்சர் முயற்சி செய்து வருகிறார். தீர்ப்பு வந்தவுடன் ஏறக்குறைய 1,150 மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். அந்தந்த மாவட்ட நிர்வாகத்துடன் கால்நடைத்துறை இணைந்து மாவட்டத்தில் உள்ளவர்களையே பணியமர்த்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற கால்நடைகளுக்கு வருகின்ற நோய்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கின்றார்கள். 
ரூ.45 கோடி ஒதுக்கீடு

இந்த நோய்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தடுப்பு மருந்துகள்தான் பல்வேறு வகையில் உதவி செய்கிறது. கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தரம் உயர்த்துவதற்கும், இன்னும் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து நோய்களை தடுப்பதற்கான மருந்துகளை தயார் செய்வதற்கும் ஆணைகளை வழங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 

இந்த ஆண்டு ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்து 88 இடங்களில் எங்கெல்லாம் கால்நடை மருந்தக கட்டடங்கள் பழுதடைந்துள்ளதோ அதையெல்லாம் சீரமைத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 3 புதிய கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட உள்ளது. நோயில்லாத கால்நடைகளை உருவாக்க வேண்டும் என்ற முதல்வரின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் 7,760 கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் மூலம் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தடுப்பூசி மருந்துகள், தாது உப்புகள் வழங்கப்படுவதுடன் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

நலத்திட்ட உதவி

இதனை தொடர்ந்து 36 பயனாளிகளுக்கு கடன் அட்டை, 30 கால்நடைகளுக்கு தலா 5 கிலோ தீவனம் இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தம் 120 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். 
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், அனந்தலை ஊராட்சிமன்ற தலைவர் தேவகி, கால்நடை உதவி இயக்குனர்கள் பாஸ்கர், உதயகுமார், ஸ்ரீதர்பாபு மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story