கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்து ரூ.4½ கோடி கொள்ளை
கள்ளச்சாவி போட்டு வீட்டின் கதவை திறந்து ரூ.4½ கோடி மற்றும் 30 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.4½ கோடி கொள்ளை
சென்னை வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரைச் சேர்ந்தவர் ஆமெல்லா ஜோதிமணி (வயது 58). இவர், பூமிக்கடியில் இன்டர்நெட் சம்பந்தமான வயர்கள் பதிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இதற்காக தனது வீட்டின் ஒரு பகுதியை இரண்டாக பிரித்து அலுவலகமாகவும், அதில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தங்கும் விதமாகவும் அமைத்து இருந்தார்.
கடந்த மாதம் ஆமெல்லா ஜோதிமணி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்து இருந்த ரூ.4½ கோடி மற்றும் 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
4 பேர் கைது
வீ்ட்டின் பூட்டுகள் உடைக்காமல் கள்ளச்சாவியை போட்டு கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதனால் அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது தொடர்பாக போரூர் அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்த மணி (31), நெமிலிச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார் (32), சுரேஷ் (32), ஆறுமுகம் (49) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சேகர் என்பவர் கொடுத்த தகவலின்பேரில் வீட்டின் உரிமையாளர் வெளியே சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி கள்ளச்சாவி போட்டு வீட்டை திறந்து கொள்ளையடித்ததாக தெரிவித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1.35 கோடி மற்றும் ஒரு கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
உல்லாசமாக இருந்தனர்
இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சேகரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சேகர், அதன் உரிமையாளர் வீட்டில் அதிக அளவில் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்ததும், அந்த பணத்தில் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.
இவர்கள் கொள்ளையில் ஈடுபடும் முன்பு கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளனர். இதற்காக சாவியை தரையில் உரசியபோது, அங்கு வந்த மூதாட்டி இவர்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு இவர்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என்றும், அலுவலகத்துக்கு வந்திருப்பதாகவும் கூறி மூதாட்டியை ஏமாற்றி அனுப்பி வைத்துவிட்டு கைவரிசை காட்டி உள்ளனர்.
போலீசாரிடம் இதுபற்றி மூதாட்டி தகவல் தெரிவித்தனர். அதன்பேரிலேயே கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதையும், அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதையும் கண்டுபிடித்து, கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story