மாணவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி போக்சோவில் கைது


மாணவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி போக்சோவில் கைது
x
மாணவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி போக்சோவில் கைது
தினத்தந்தி 17 Dec 2021 8:40 PM IST (Updated: 17 Dec 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

மாணவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி போக்சோவில் கைது

கோவை

சரவணம்பட்டியில் பாலியல் பலாத்காரம் செய்து மாணவியை கொன்று நாடகமாடிய கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

10-ம் வகுப்பு மாணவி

கோவையை அடுத்த சரவணம்பட்டியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவருடைய தாய் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அந்த மாணவியை காணவில்லை. இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணம்பட்டி யமுனாநகர் பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் கிடந்த சாக்குமூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்த தகவலின் பேரில் சரவணம் பட்டி போலீசார் விரைந்து சென்று சாக்குமூட்டையை திறந்து பார்த்தனர். அப்போது சாக்குமூட்டைக்குள் காணாமல் போன மாணவி, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் மாணவியின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்தது.

தொழிலாளி போக்சோவில் கைது

இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார் யார் பேசி உள்ளனர் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில், அந்த மாணவியிடம், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளி முத்துக்குமார் (வயது 44) என்பவர் பேசியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு உடலை சாக்குமூட்டையில் கட்டி முள்புதரில் வீசியது தெரியவந்தது. 

இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் கொலை (302), தடயத்தை மறைத்தல் (201), வீடு புகுந்து திருடுதல் (380) மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளில் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4¼ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. முத்துக்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.
கைதான முத்துக்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

2½ பவுன் தங்க நகை

10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கும், கட்டிட தொழிலாளியான முத்துக்குமாருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. மேலும் அவர்களிடம் பணம், நகை கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமார், மாணவியின் தாயாரிடம் இருந்து 2½ பவுன் தங்க நகையை வாங்கி விற்று செலவு செய்து உள்ளார். ஆனால் நகையை, மாணவியின் தாயார் தொடர்ந்து கேட்டு உள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இதனால் அச்சம் அடைந்த அவர் கடந்த 10-ந் தேதி மாலை அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று உள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவியிடம், நகையை திருப்பி தந்து விட்டதாக உனது தாயிடம் பொய் சொல்லி விடு. நாளை (11-ந் தேதி) காலை உன்னிடம் அந்த நகையை கொண்டு வந்து தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். 

இதை நம்பிய அந்த சிறுமி, தனது தாயை செல்போனில் தொடர்பு கொண்டு முத்துக்குமார் நகையை கொண்டு வந்து கொடுத்து விட்ட தாக தெரிவித்தார். உடனே முத்துக்குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

மறுநாள் (11-ந் தேதி) காலை முத்துக்குமார், அந்த மாணவியை செல்போனில் தொடர்பு தனது வீட்டிற்கு வந்து நகையை வாங்கி கொள்ளுமாறு கூறினார். அதை நம்பிய அந்த மாணவியும், முத்துக்குமார் வீட்டிற்கு சென்று நகையை தரும்படி கேட்டு உள்ளார்.

குப்பையில் உடல் வீச்சு

அப்போது வீட்டில் தனியாக இருந்த முத்துக்குமார் திடீரென்று அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறித்துடித்தார். உடனே முத்துக்குமார் மாணவியின் வாயில் துணியை வைத்து அழுத்தி உள்ளார். பின்னர் மாணவியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். 

அப்போது எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் மாணவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்து உள்ளார். பின்னர், முத்துக்குமார், மாணவியின் கை, கால்களை கட்டியுள்ளார். தொடர்ந்து மாணவியின் உடலை சாக்குமூட்டையில் கட்டி குப்பைமேட்டில் வீசினார்.

செல்போன் பேச்சு காட்டி கொடுத்தது

இதையடுத்து அவர், அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் ரூ.3 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு தப்பி வீட்டிற்கு சென்றார். தொடர்ந்து அவர், சிறுமியின் தாயாரிடம், உனது மகள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு யாருடனோ சென்று விட்டதாக கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து மாணவியின் தாயாருடன் சேர்ந்து மாணவியை தேடுவது போல் நடித்து ஏமாற்றி உள்ளார். மேலும் அவர், போலீஸ் நிலையம் சென்று புகார் அளிக்கவும் உதவி உள்ளார். ஆனால் மாணவியின் செல்போனில் கடைசியாக முத்துக்குமார் பேசிய ஆதாரம் கிடைத்ததால் போலீசில் சிக்கிக்கொண்டார்.

இவ்வாறு வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தார்.
----


Next Story