தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் வெற்றி


தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 17 Dec 2021 9:13 PM IST (Updated: 17 Dec 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் வெற்றி பெற்றன

கோவில்பட்டி:
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டியில் தமிழ்நாடு, டெல்லி அணிகள் வென்றன.
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
2-வது நாளான நேற்று காலையில் முதலாவது போட்டியில் இமாச்சல பிரதேச அணியும், அந்தமான் நிக்கோபார் அணியும் மோதுவதாக இருந்தது. ஆனால் அந்தமான் நிக்கோபார் அணி வீரர்கள் வராததால், இமாச்சல பிரதேச அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அணி அபாரம்
2-வது போட்டியில் தமிழ்நாடு அணி 7-0 என்ற கோல் கணக்கில் ஜம்மு காஷ்மீர் அணியை பந்தாடியது. தமிழ்நாடு அணியின் கேப்டன் நிஷிதேவ அருள், சதீஷ்குமார் ஆகியோர் தலா 2 கோல்களும், முருகேஷ், முத்து, மனோஜ் ஆகியோர் தலா ஒரு கோலும் அபாரமாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஜம்மு காஷ்மீர் அணி வீரர்கள் இறுதி வரையிலும் பதில் கோல் அடிக்க முயன்றும், தமிழ்நாடு அணி வீரர்கள் சிறப்பாக தடுத்தனர். போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்வான தமிழக அணி வீரர் சதீஷ்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது.
டெல்லி அணி வெற்றி
3-வது போட்டியில் டெல்லி அணி 4-2 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது. டெல்லி அணி வீரர்கள் ரோஹித், கோவிந்த் ஆகியோர் தலா 2 கோல்களும், புதுச்சேரி அணி வீரர் ஜெயபிரதாப் 2 கோல்களும் அடித்தனர்.
4-வது போட்டியில் மணிப்பூர் அணி 9-2 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியை வென்றது.
இன்றைய ஆட்டங்கள்
இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேற்கு வங்காள அணியும், ஹரியானா அணியும் விளையாடுகிறது. காலை 10.30 மணிக்கு சண்டிகார் அணியும், கர்நாடகா அணியும் மோதுகின்றன. மதியம் 12.15 மணிக்கு ஆந்திர பிரதேச அணியும், மிசோரம் அணியும் விளையாடுகிறது.
மதியம் 2.15 மணிக்கு பஞ்சாப்- மராட்டிய அணிகளும், மாலை 4 மணிக்கு கேரளா- அருணாசல பிரதேச அணிகளும், 5.45 மணிக்கு ஒடிசா- ராஜஸ்தான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு உத்தரபிரதேசம்- உத்தரகாண்ட் அணிகளும் களம் காண்கின்றன.

Next Story