வங்கி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
வங்கி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
கோவை
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதை கண்டித்து கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவையில் நேற்று ரெயில் நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை மற்றும் ஆர்.எஸ். புரம் திருவேங்கட சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்பட 9 அமைப்புகள் கலந்து கொண்டன.
மேலும் எல்.ஐ.சி. உள்பட இன்சூரன்ஸ் நிறுவனங்களும் மதிய உணவு இடைவேளையின் போது தங்களது அலுவலகங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் காரணமாக இந்த 2 நாட்களில் சுமார் ரூ.500 கோடி வரை பணம் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசியமயமாக்கப்பட்ட வங்கி சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மேலும் பழைய தலைமுறை தனியார் வங்கிகளாக உள்ள லட்சுமி விலாஸ், சிட்டி யூனியன், கரூர் வைஸ்யா, கத்தோலிக் சிரியன் உள்ளிட்ட வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றம் செய்ய வேண்டும். இதேபோல் வங்கி ஊழியர்கள் ஓய்வூதியத்தில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் ஆன்லைன் வங்கி சேவை மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் தேவையான அளவு இருப்பு இருப்பதால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்ட நிலையில், பெரும்பாலான ஏ.டி.எம்.களில் சர்வர் பிரச்சினை காரணமாக பணம் வரவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த மசோதாவை, இந்த குளிர்கால கூட்டத்தொடரில் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story