ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை


ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 18 Dec 2021 5:15 AM IST (Updated: 18 Dec 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை ஒதுக்கப்பட்ட தேதியையும் மீறி பலர் வந்ததால் பரபரப்பு.

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் 2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி உடற்தகுதி தேர்வு நடந்தது. இந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நேற்று முதல் தொடங்கியது.

அதன்படி, ஒவ்வொருவருக்கு குறிப்பிட்ட தேதியில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக காலை 8 மணியில் இருந்து பெண்கள் வந்து குவிந்தனர். ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் வந்ததால், பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள 3 டாக்டர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (நேற்று) 30 பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 24-ந்தேதியில் மருத்துவ பரிசோதனைக்கு ஒதுக்கப்பட்டவர்களும் நேற்று வந்து குவிந்ததால் தான் அனைவருக்கும் பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனது. மற்றபடி டாக்டர்கள் பற்றாக்குறை எதுவும் இங்கு இல்லை, ’ என்றனர்.

Next Story