செங்கல்பட்டு மற்றும் பாலூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் திடீர் மறியல்


செங்கல்பட்டு மற்றும் பாலூர் ரெயில் நிலையங்களில் பயணிகள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 18 Dec 2021 12:56 PM IST (Updated: 18 Dec 2021 12:56 PM IST)
t-max-icont-min-icon

கால தாமதமாக ரெயில் வருவதை கண்டித்து செங்கல்பட்டு பாலூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினந்தோறும் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மின்சார ரெயில்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணம், திருமால்பூர், காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு வழியாக மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்பட்ட மின்சார ரெயிலில் பயணம் செய்த பொதுமக்கள் பாலூர் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது இறங்கி தண்டவாளத்தில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார் பயணிகளிடம் கேட்டபோது, தினந்தோறும் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரெயில் கால தாமதமாக இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்கு வீட்டுக்கு செல்ல முடியவில்லை எனவும், ஆங்காங்கே ரெயில்களை நிறுத்தி வைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மின்சார ரெயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையயத்திலும் பயணிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விரைவு ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் 2 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story