பஸ் படிக்கட்டுகளில் மாணவ மாணவிகள் பயணிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு
பஸ் படிக்கட்டுகளில் மாணவ மாணவிகள் பயணிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பஸ் படிக்கட்டுகளில் மாணவ-மாணவிகள் பயணிப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.
படிக்கட்டுகளில் பயணம்
தமிழகத்தில் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் பயணம் செய்தால் டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் மற்றும் முக்கிய இடங்களில் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு பணி
இந்த பணிகளை அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்குகின்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தி போதுமான பயணிகளை மட்டும் பஸ்சில் ஏற்றுகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு பஸ்களின் படிக்கட்டுகளில் மாணவ-மாணவிகள் பயணம் செய்வதை தடுக்க தனி குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். பொள்ளாச்சி உடுமலை ரோடு, கோட்டூர் ரோடு உள்பட தாலுகாவில் 18 இடங்களிலும், ஆனைமலை தாலுகாவில் வி.ஆர்.டி. பள்ளி, முக்கோணம், வேட்டைக்காரன்புதூர், கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கூடுதல் பஸ்கள்
இதை தவிர தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பயணிகளை பாதுகாப்பான முறையில் பஸ்சில் ஏற்றி, இறக்குவதை உறுதி செய்த பிறகே பஸ்களை இயக்க வேண்டும். பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாதவாறு டிரைவரும், கண்டக்டரும் பணியாற்ற வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக பஸ்களை இயக்க உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story