இளநீரில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும்
இளநீரில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி திப்பம்பட்டி வணிக வளாகத்தில் இளநீரில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இளநீர் வணிக வளாகம்
தென்னை விவசாயத்தில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை குறைக்கவும், விவசாயிகள், வியாபாரிகள் நேரடியாக வியாபாரம் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் ரூ.3 கோடியே 25 லட்சம் செலவில் இளநீர் வணிக வளாகம் கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி திறக்கப்பட்டது.
இதற்கிடையில் தோட்டத்தில் இருந்து வாகனங்கள் மூலம் இளநீரை வணிக வளாகத்திற்கு கொண்டு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் இளநீரை விற்பனைக்கு கொண்டு வருவதில்லை. இதையடுத்து தோட்டங்களுக்கு வியாபாரிகளே நேரடியாக சென்று இளநீரை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக இளநீர் வணிக வளாக கட்டிடம் யாருக்கும் பயன்படாமல் உள்ளது.
பதப்படுத்தி விற்பனை
மேலும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் வணிக வளாகம் மாறி வருகிறது. இரவு நேரங்களில் வணிக வளாகத்திற்குள் அமர்ந்து மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே வணிக வளாகத்தில் இளநீரை மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்கவும், இளநீரை பதப்படுத்தி விற்பனை செய்வதற்கு தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வரத்து அதிகமாக உள்ள காலங்களில் 5 லட்சம் இளநீரும், வரத்து குறைவாக இருக்கும் போது 2 லட்சம் இளநீரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் மட்டுமல்லாது டெல்லி, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு இளநீர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. கோடை காலத்தில் இளநீர் ரூ.30 வரையும், மழைக்காலங்களில் ரூ.20 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மதிப்பு கூட்டு பொருட்கள்
இதற்கிடையில் மழை, பனியின் காரணமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் விற்பனை குறைவாக இருப்பதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே பொள்ளாச்சியில் உள்ள இளநீரை வணிக வளாகத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அங்கு இளநீரில் இருந்து ஜூஸ், மில்க்ஷேக் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் இளநீரின் தேவை அதிகமாக உள்ளது.
எனவே தண்ணீரை எடுத்து கெமிக்கல் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். மேலும் இளநீரை சுத்திகரித்து பதப்படுத்தி வைப்பதன் மூலம் 6 மாதம் முதல் ஒராண்டு வரை இளநீர் கெடாமல் இருக்கும். மழைக்காலங்களில் இளநீர் தேவை குறைந்து, விலை சரியும் போது இளநீரை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். கோடை காலத்தில் இளநீர் உற்பத்தி குறைந்து, தேவை அதிகரிக்கும் போது பதப்படுத்தப்பட்ட இளநீரை விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதே கோரிக்கையை விவசாயிகளும் வலியுறுத்தி உள்ளார்கள்.
Related Tags :
Next Story