ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு
பொள்ளாச்சி
குடிநீர் குழாய் பதிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊராட்சி மன்ற தலைவர்
பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 67). இவர் ராமபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (45). இவர் பா.ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெகன் தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு கொடுக்க குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுச்சாமி ஆழமாக தோண்டுமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமிக்கும், ஜெகனுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
வழக்கு
இதற்கிடையில் போலீசில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுச்சாமி புகார் கொடுத்தார். அதில் சாலை விரிவாக்க பணியின் காரணமாக அடிக்கடி குடிநீர் குழாயில் பழுது ஏற்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் தாங்களே குழாய் இணைப்பை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில் ஜெகனிடம் ஆழமாக குழி தோண்டவில்லை என்றால் அடிக்கடி சேதம் ஏற்படும் என்று கூறினேன். அதற்கு என்னை ஜெகன் தாக்கியதாக கூறப்பட்டு இருந்தது.
போலீசில் ஜெகன் கொடுத்த புகாரில் சேதமடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து தர வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து குழி தோண்டி குடிநீர் குழாயை சரிசெய்த போது யாரை கேட்டு குழி தோண்டுகிறாய் என்று கூறி என்னை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுச்சாமி தாக்கியதாக கூறப்பட்டு இருந்தது. இரு தரப்பு புகாரையும் பெற்றுக் கொண்ட போலீசார் இருவரது மீதும் தகாத வார்த்தையால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story