சென்னையில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பேரணி
அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நேற்று பேரணி நடந்தது.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் நடந்த இந்த பேரணியை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர் டாக்டர் ஸ்ரீவல்ல பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநில துணை தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கீழனூர் ராஜேந்திரன் உள்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் தொடங்கிய பேரணி, திருவேங்கடம் தெரு வழியாக வந்து புதுப்பேட்டையில் நிறைவடைந்தது. பேரணியில் வரும் வழியெங்கும், மத்திய அரசை கண்டித்தும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து நிருபர்களிடம் டாக்டர் ஸ்ரீவல்ல பிரசாத் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதாரம் தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டமும், பசி, பட்டினியால் வாடுபவர்களின் எண்ணிக்கையும், விலைவாசி உயர்வுதான் அதிகரித்து கொண்டிருக்கிறது. இவர்களின் ஆட்சியில் விவசாயிகள், மாணவர்கள் என பொதுமக்கள் அனைவரும் வேதனையை மட்டுமே சந்தித்து வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பேரணியை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story