தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
போக்குவரத்து பாதிப்பு
கோவை ஆவாரம்பாளையம் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சிக்னல் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் உள்ளனர். ஆனால் மதியம் யாரும் அங்கு இருப்பது இல்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.
பாலு, கோவை.
பஸ்நிலையத்துக்குள் வராத பஸ்
ஊட்டியில் இருந்து தினமும் காலை கூடலூர் கண்ணனூருக்கு தமிழக பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் சுல்தான்பத்தேரி, மீனங்காடி பகுதியில் உள்ள பஸ்நிலையத்துக்குள் செல்வது இல்லை. இதனால் கூடலூர், ஊட்டி வர காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ், முறையாக பஸ்நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும்.
பஷீர், மீனங்காடி.
பல்லாங்குழியான சாலை
கோவை நஞ்சப்பா ரோடு, அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பித்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பல்லாங்குழியான அந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
அஸ்ரப், ஆடீஸ் வீதி.
சாலையில் செல்லும் கழிவுநீர்
கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் முன்பு பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அந்த வழியாக சாலையில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு அதை சரிசெய்ய வேண்டும்.
விக்கி, பாப்பநாயக்கன்பாளையம்.
தினத்தந்தி செய்தி எதிரொலி
மீண்டும் அரசு பஸ் சேவை
கோவை வடவள்ளி அண்ணா நகரில் இருந்து கவுண்டம்பாளையம் வழியாக சுந்தராபுரம், குறிச்சி, ஹவுசிங் யூனிட் வரை அரசு பஸ்(எண்-4) இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அந்த வழித்தடத்தில் மீண்டும் பஸ் சேவை தொடங்கி உள்ளது. இதற்கு காரணமான தினத்தந்திக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி.
எம்.முருகேசன், கவுண்டம்பாளையம்.
சாலையில் அபாய பள்ளம்
கோவை ஆர்.எஸ்.புரம் தேவாங்க மேல்நிலைப் பள்ளி முன்பு வேகத்தடை அருகே ரோட்டில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதில் சிலர் பெரிய கல்லை போட்டு உள்ளனர். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி, அதன் மீது மோதி கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அந்த அபாய பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
அபு, கோவை.
சாதாரண கட்டண பஸ்கள்
கோவை மாநகரில் சாதாரண கட்டண பஸ்கள் குறைந்த அளவில்தான் இயக்கப்படுகிறது. அதிக கட்டணம் கொண்ட சொகுசு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சொகுசு பஸ்களுக்கு இணையாக சாதாரண கட்டண பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.சுரேஷ், கோவைப்புதூர்.
மாணவர்களை துரத்தும் தெருநாய்கள்
கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளி அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக நடமாடும் தெருநாய்கள், காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகளை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
சீனிவாசன், வெள்ளலூர்.
பன்றிகள் தொல்லை
கோவை மாநகராட்சி 32-வது வார்டு ஆறுமுகம் லே-அவுட் பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக திரியும் பன்றிகள், குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. எனவே பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்.
பிரசாத், கோவை.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை பீளமேட்டில் இருந்து பயணியர் மில் ரோடு வழியாக காந்திமாநகர் பகுதிக்கு செல்ல மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் சரியாக ஒளிரவில்லை. இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
சுந்தரேசன், பீளமேடு.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை பாலசுந்தரம் சாலையில் சாலையோரத்தில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. காற்று வீசும்போது அந்த குப்பைகள் சாலைக்கு வருவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பாலாஜி, கோவை.
Related Tags :
Next Story