தொழில் அதிபர் வீட்டில் வைர நகை திருடிய பெண் கைது
தொழில் அதிபர் வீட்டில் வைர நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அதை விற்க முயன்ற போது நண்பரும் பிடிபட்டார்.
கோவை
தொழில் அதிபர் வீட்டில் வைர நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அதை விற்க முயன்ற போது நண்பரும் பிடிபட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகையை விற்க முயற்சி
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு இளம் பெண்ணும், வாலிபரும் ஏறி இறங்கினர். இதில், அந்த பெண்ணின் கையில் வைர வளையல் இருந்தது. அதை அவர்கள் விற்க முயன்றும் நகைக்கடைக்காரர்கள் யாரும் வாங்க வில்லை என்று தெரிகிறது.
மேலும் அவர்களின் மீது சந்தேகம் எழுந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.
தொழில் அதிபர் வீட்டில் திருட்டு
விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துப்பேச்சி (வயது32), அவருடைய நண்பரான விருதுநகரை சேர்ந்த மாரிசெல்வன் (27) என்பது தெரியவந்தது. இதில், முத்துபேச்சி தொழில் அதிபர்களின் வீடுகளுக்கு வேலைக்கு சேர்ந்து பணம், நகை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் காளப்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் பாலாஜி வீட்டில் முத்துப்பேச்சி வேலை செய்தார். பாலாஜி தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அதை பயன்படுத்தி வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர வளையலை முத்துப்பேச்சி திருடி உள்ளார்.
2 பேர் கைது
அந்த வளையலை விற்பதற்காக தனது நண்பர் மாரிசெல்வனுடன் டவுன்ஹால் பகுதிக்கு வந்த போது போலீசிடம் சிக்கினர். இது குறித்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து முத்துப்பேச்சி, மாரிசெல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், முத்துபேச்சி பீளமேட்டில் வேலை பார்த்த 2 வீடுகளில் 10 பவுன் நகை உள்பட மொத்தம் 15 பவுன் நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story