மாமல்லபுரம் நாட்டிய விழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்


மாமல்லபுரம் நாட்டிய விழா அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Dec 2021 6:13 PM IST (Updated: 20 Dec 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் நாட்டிய விழா மேடைகள், கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நாட்டிய விழா

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பார்த்து ரசிக்கின்றனர். வெளிநாட்டு பயணிகளின் ரசனை, ஆர்வம் கருதி தமிழக சுற்றுலாத்துறை, மத்திய சுற்றுலாத்துறை பங்களிப்புடன் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு நாட்டிய விழாவை நடத்துகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்த விழாவில் பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டிய, நடனங்கள் மற்றும் கரகம், காவடி, ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற, கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டு பயணிகளின் வருகை இல்லாததால் விழா தவிர்க்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்ததையடுத்து இந்த விழாவை வருகிற 23 -ந்தேதி முதல் ஜனவரி மாதம் 22-ந்தேதி வரை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

திவ்விய தேச கோவில் அரங்குகள்

இதற்கான கலை நிகழ்ச்சிகள் நடத்த கடற்கரை கோவில் அருகில் திறந்த வெளிமேடை அமைக்கப்பட்டு வருகிறது. விழா மேடை அருகில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான காலி மைதானத்தில் 300 அடி நீளம், 300 அடி அகலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பல்துறை கண்காட்சி, உணவுக்கூடம் அமைக்க, சுற்றுலா வளர்ச்சி கழக வளாகத்தை தூய்மைப்படுத்தி திடல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திடல் அமைக்கும் இடத்தின் ஒரு பகுதியில் 1 மாத அளவில் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயாருடன் அருள்பாலிக்கும் வகையில் 108 திவ்விய தேச கோவில் அரங்குகள் அமைக்கப்பட்டு 108 அவதார திருக்கோலத்தில் உள்ள பெருமாள் சிலைகள் உள்ள அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.


Next Story