தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Dec 2021 8:47 PM IST (Updated: 20 Dec 2021 8:47 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை ரங்கேகவுண்டர் வீதி கே.கே.பிளாக் கார்னர் கடைவீதி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. மேலும் அவை ஆங்காங்கே சிதறி கிடப்பதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இது தவிர துர்நாற்றம் வீசுவதோடு அந்த வழியாக வரும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
சாதிக், கோவை. 



மரக்கிளைகள் வெட்டப்படுமா?

வீரகேரளம் அருகே தொண்டாமுத்தூர் செல்லும் வழியில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மீது அருகில் உள்ள மரத்தின் கிளைகள் முறிந்து விழும் நிலையில் அபாயகரமாக நிற்கின்றன. இதனால் அங்கு வரும் பக்தர்கள், அருகில் உள்ள சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சோமசுந்தரம், வீரகேரளம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்கூடலூர் பகுதியில் சாலையோரமாக உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இது தொடர்பாக பலமுறை நகராட்சிக்கு புகார் கொடுத்தும் சரி செய்யப்படவில்லை. கோடைகாலம் நெருங்குவதால் குடிநீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.
டென்னி, நடுக்கூடலூர்.

சுகாதார சீர்கேடு

கோவை காந்தி பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அங்கு குப்பை தொட்டி கூட இல்லை. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது தவிர போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பை தொட்டி வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ்குமார், கோவை.

ஆபத்தான மின்கம்பம்

கோவை விளாங்குறிச்சி கூட்டுறவு நகரில் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பம் ஒன்று நிற்கிறது. பலத்த மழை மற்றும் சூறாவளி காற்று வீசும்போது மின்கம்பம் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, விளாங்குறிச்சி.

கடும் துர்நாற்றம்

கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சாலையின் இருபுறமும் குப்பைகளை மலை போல கொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அவை முறையாக அகற்றப்படவில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பை தொட்டி இ்ல்லை. தெருநாய்கள் குப்பைகளை சாலை வரை சிதறடிப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்வீர் அகமது, கோவை.

குண்டும் குழியுமான சாலை 

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
சுரேஷ், ஒண்டிப்புதூர். 


ஒளிராத தெருவிளக்குகள் 

கோவை மருதமலை பஸ் நிலையத்தில் இருந்து கோவையை நோக்கி வரும் சாலையில் நடுவே உள்ள 20-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அந்த விளக்குகள் ஒளிர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சங்கீதா, வடவள்ளி.

விபத்தை ஏற்படுத்தும் குழி 

கோவை ரேஸ்கோர்சில் உள்ள ரெட்பீல்டு பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. இதன் அருகே உள்ள பள்ளி அருகே சாலையில் பெரிய அளவில் குழி உள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால் அந்த குழியில் சிலர் விழுந்து தப்பிச்செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளி குழந்தைகளை ஏற்றி வருபவர்கள் அதற்குள் விழுந்து உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு விபத்தை ஏற்படுத்தும் அந்த குழியை சரிசெய்ய வேண்டும்.
நடேசன், கோவை. 

சீரான குடிநீர் வேண்டும்

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குடிநீரை தேடி அலையும் நிலை நீடித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
மஜித், சூளேஸ்வரன்பட்டி.

குழிகள் நிறைந்த சாலை 

கோவை தடாகம் சாலையில் இருந்து முத்தண்ணன் குளக்கரை வழியாக செல்லும் சாலை பழுதடைந்து குழிகள் அதிகளவில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் உள்ள குழிகளை சரிசெய்ய வேண்டும்.
வடிவேல், கோவை. 



Next Story