பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி


பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 20 Dec 2021 9:41 PM IST (Updated: 20 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

பெரியகுளம்: 

பெரியகுளம் தாலுகா, கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை போலீஸ்காரர். இவர், கடந்த 2013-ம் ஆண்டு சாத்தாகோவில்பட்டியில் இருந்து கெங்குவார்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகனுக்கு வலது கால் முறிந்தது. இதனை தொடர்ந்து தனக்கு விபத்து இழப்பீடு வழங்கக்கோரி பெரியகுளம் சப்-கோர்ட்டில் முருகன் அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முருகன் இறந்துவிட்டார். அதனை அடுத்து அவரது மனைவி லட்சுமி வழக்கை தொடர்ந்து நடத்தினார். 

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் ரூ.93 ஆயிரத்து 696 இழப்பீடு தொகையாக முருகன் மனைவிடம் வழங்கும்படி நீதிபதி மாரியப்பன் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு ெதாகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு ஒன்றை லட்சுமி தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நேற்று காலை கோர்ட்டு ஊழியர் மணி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வக்கீல்கள் ஆகியோர் பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு போடிக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

Next Story