காய்கறி விலை கிடு கிடு உயர்வு


காய்கறி விலை கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. பச்சை மிளகாய் கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை கிடு கிடுவென உயர்ந்து உள்ளது. பச்சை மிளகாய் கிலோ ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காய்கறி சந்தை

கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கிணத்துக்கடவு தாலுகா பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் தக்காளி, பச்சை மிளகாய், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். 

தற்போது கிணத்துக்கடவு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதனால் சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.40-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.98-க்கு விற்பனையானது. இது கடந்த மாதத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.58 அதிகம் ஆகும். 

பொதுமக்கள் கவலை

இதேபோன்று மற்ற காய்கறிகளின் விவரம் வருமாறு(கிலோவில்):
தக்காளி ரூ50, கத்தரிக்காய் ரூ.69, முள்ளங்கி ரூ.69, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.45, அவரைக்காய் ரூ.80, பீட்ரூட் ரூ.50, வெண்டைக்காய் ரூ.100.
கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து வெண்டைக்காய் அவரைக்காய், தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறி வரத்து குறைந்து வருகிறது.

இதனால் தொடர்ந்து சந்தையில் அதன் விலைகள் அதிகரித்து காணப்படுகிறது. சந்தையில் விலை அதிகரித்து வருவதால் சில்லறை கடைகளில் காய்கறிகள் விலை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.


Next Story