101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு


101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 9:57 PM IST (Updated: 20 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது.

வால்பாறை

வால்பாறையில் 101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டது. 

ஆய்வு செய்ய உத்தரவு

நெல்லையில் அரசு உதவிபெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானார்கள். இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. 

அதன்படி வால்பாறை வட்டார கல்வி அலுவலர் காளிமுத்து, உதவி வட்டார கல்வி அலுவலர் யோகேஷ்வரி, அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம், ஆசிரியர் பயிற்றுனர்கள் செந்தில் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட 4 குழுவினர் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 101 பள்ளிகளில் கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தனர்.

மேற்கூரைகளில் விரிசல்

ஒவ்வொரு பள்ளியிலும் வகுப்பறைகள், மேற்கூரைகள், கழிப்பிடங்கள், சத்துணவு மையங்கள், சுற்று சுவர்கள் என அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்யப்பட்டன. 

இதில் சில பள்ளிகளில் தொடர் மழை காரணமாக மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் ஈரத்தன்மை கொண்டு இருப்பதால் கட்டிடங்கள் பழுதாகும் நிலை இருப்பது, சுற்றுச்சுவர்கள் இல்லாமல் இருப்பது, கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பது, மழைநீர் வடிகால் இல்லாமல் இருப்பது, மேற்கூரைகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அறிக்கை

மேலும் காட்டுயானைகளால் தாக்குதலுக்கு ஆளான பள்ளி சுற்றுச்சுவர்கள், சத்துணவு மையங்கள் சரி செய்யப்படாமல் இருப்பது, கழிப்பிடங்களுக்கு போதிய கட்டிடங்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இது தவிர தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, ஆய்வு அறிக்கை பள்ளி கல்வித்துறைக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story