சென்னை விமான நிலையத்தில் ரூ.56½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.56½ லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Dec 2021 4:24 PM IST (Updated: 21 Dec 2021 4:24 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் ரூ.35 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள 694 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு பணம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் செல்ல வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 3 பயணிகள் மீது சந்தேகம் அடைந்து அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்த சூட்கேசில் ரூ.14 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 73 ஆயிரம் சவுதி ரியால்கள் இருந்தன.

அதேபோல் சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல வந்த 7 பேர் குழுவின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.42 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 லட்சம் ஐக்கிய எமிரேட்ஸ் திர்ஹாம்களும், 2 லட்சத்து 92 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து 10 பேரின் விமான பயணத்தை ரத்துசெய்த சுங்க இலாகா அதிகாரிகள், 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் யாருடையது? ஹவாலா பணமா? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்திய சுங்க இலாகா அதிகாரிகள், அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.11 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 266 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் இருந்த ரூ.4 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன்கள் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.18 லட்சத்து 88 ஆயிரம் மதிப்புள்ள 428 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.35 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள 694 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story