வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம் இடமாற்றம்

வார்டு மறுவரையறை தொடர்பாக தாம்பரத்தில் 23-ந்தேதி நடைபெறும் கருத்து கேட்பு கூட்டம், தாம்பரம் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் இதர 6 நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் கருத்துக்கேட்பு கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, நிர்வாக காரணங்களால் மேற்படி கருத்துக்கேட்பு கூட்டம், தாம்பரம் முத்துலிங்கம் தெருவில் உள்ள தாம்பரம் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு 23-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறுகிறது.
எனவே காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் வார்டு மறுவரையறைக்கு உட்படும் தாம்பரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, பொன்னேரி நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் சோளிங்கர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு, தங்களின் ஆட்சேபனைகள், கருத்துகளை நேரடியாக தெரிவித்துகொள்ளலாம். மேலும் இதன் விவரங்களை மனுக்களாகவும் வழங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சி 70 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அனகாபுத்தூர் பகுதியில் 1-வது வார்டு தொடங்கி மாடம்பாக்கம் பகுதியில் 70-வது வார்டு முடிவடைகிறது. தாம்பரம் மாநாகராட்சி அலுவலகத்தில் வார்டு வரையரை செய்யப்பட்ட வரைபடம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story