குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது


குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2021 8:24 PM IST (Updated: 21 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப தகராறு

ஆவடியை அடுத்த திருநின்றவூர் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர் (வயது 34). இவர் சென்னையில் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (25). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஷியாம் சுந்தர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் ஷியாம் சுந்தர் வெளியே சென்று விட்டார். அப்போது அனிதாவின் தாயார் அங்கே வந்துள்ளார். அவரிடத்தில் தனது குழந்தையை கொடுத்து அனுப்பிவிட்டு அனிதா மட்டும் வீட்டில் இருந்தார்.

சிறிது நேரம் கழித்து அனிதாவின் தாயார் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் கதவு திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா சமையலறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக அவரது கணவர் ஷியாம் சுந்தரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story