ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை ரூ.51 லட்சம் பறிமுதல்
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கலெக்டர் அலுவலகம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் 3-வது தளத்தில் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உதவி செயற்பொறியாளர்களாக நாகராஜன், லீலாவதி ஆகியோர் உள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 42 பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 பேரூராட்சிகள் என மொத்தம் 57 பேரூராட்சிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சாலை பணிகள், கட்டுமான பணிகள் திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
பேரூராட்சி பகுதிகளில் புதிதாக தார் சாலை அமைக்க ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 2 நாட்களாக அலுவலக நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
லஞ்ச ஒழிப்பு சோதனை
இந்தநிலையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ், போலீஸ் சூப்பிரண்டு ரேகா மற்றும் போலீசார் நேற்று மாலை பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அங்கு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களின் செல்போன்களை பெற்று கொண்ட போலீசார் தங்களது சோதனையை தொடங்கினார்கள். அப்போது மேஜைகளுக்கு அடிப்பகுதியில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அனைத்து அதிகாரிகளின் கைப்பைகள், மேஜைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனையிட்டனர். அங்குள்ள பணத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
ரூ.51 லட்சம்
இந்த சோதனையில் கணக்கில் வராத மொத்தம் ரூ.51 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story