தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடமலைக்குண்டு அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தேனி:
கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 84 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியை விடுமுறையில் இருந்ததால் ஆசிரியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தலைமை ஆசிரியை அடிக்கடி விடுமுறை எடுப்பதால் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுக்காக தலைமை ஆசிரியையிடம் கையெழுத்து பெற பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story