பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? பெற்றோர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? பெற்றோர்- ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Dec 2021 11:31 PM IST (Updated: 22 Dec 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுமா? என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரையாண்டு விடுமுறை
தமிழ்நாட்டில் உள்ள  பள்ளிக்கூடங்களில் வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் 23-ந் தேதி (இன்று) நிறைவடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதம் 24-ந் தேதி முதல் ஜனவரி 2-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. கல்லூரிகளை பொறுத்தவரை அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் முடிவின் படி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
தனியார் பள்ளிக்கூடங்களிலும் அந்தந்த நிர்வாகங்களின் ஒப்புதலின் பேரில் விடுமுறைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு கல்வித்துறை உரிய உத்தரவு வழங்கினால் மட்டுமே விடுமுறை அனுமதிக்க முடியும். சில தனியார் பள்ளிக்கூடங்களும் அரசின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவதால், அந்த பள்ளிகளும் விடுமுறை குறித்த எந்த அறிவிப்பும் பெற்றோருக்கு வழங்கவில்லை.
அதிகாரிகள் திட்டம்?
இந்தநிலையில் பள்ளிக்கூடங்கள் மிக தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு விடுமுறை வழங்கும் திட்டம் கல்வித்துறையில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும், முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று உரிய அறிவிப்பு இல்லாததால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே விடுமுறை வழங்காமல் இந்த நாட்களை வகுப்புகள் எடுக்க பயன்படுத்த இருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
சமீப காலமாக மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக விடுமுறைகள் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் தகவல்கள் உள்ளன.
ஆசிரியர்கள் கோரிக்கை
பள்ளிக்கூடங்கள் திறப்பு தாமதம் என்பது மாணவ-மாணவிகளுக்கு மட்டும்தான். அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் வழக்கம்போல ஜூன் மாதத்தில் இருந்து ஆசிரிய-ஆசிரியைகள் தவறாமல் பணிக்கு வந்து செல்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் மட்டுமே வகுப்பில் இல்லை. ஆனால், ஆன்லைன் வகுப்பு, செல்போன் மூலம் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை, சத்துணவு உலர் பொருட்கள் வழங்கும் பணி, இலவச பொருட்கள் வழங்கும் பணி, தேர்வு நடத்தி தேர்வுத்தாள் சரிபார்த்தல், மாணவர் சேர்க்கை, மத்திய-மாநில அரசுகளின் கல்வித்திட்டங்கள் என்று அனைத்து பணிகளையும் ஆசிரிய -ஆசிரியைகள் செய்து வருகிறார்கள்.
எனவே அரையாண்டு விடுமுறை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். அனைத்து ஆசிரிய-ஆசிரியைகளும் தமிழக அரசின் 2-ம் பருவ அல்லது அரையாண்டு விடுமுறை அறிவிப்பை எதிர்பார்த்து உள்ளனர்.
பெற்றோர் எதிர்பார்ப்பு
இதுபோல் பெற்றோர்களும் விடுமுறையை எதிர்பார்த்து இருக்கிறார்கள். மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை என்றாலும், அவர்களின் பெற்றோர் தொடர்ச்சியாக பணி செய்து வருகிறார்கள். பெற்றோரை பொறுத்தவரை தங்கள் உறவினர் வீடுகள், தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகள், வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடு மற்றும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் நாட்களாக விடுமுறை நாட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பள்ளிக்கூட காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு விடுமுறைகளை பார்த்துதான் குடும்பங்களில் நல்ல விஷயங்களுக்கு நாள் குறிப்பார்கள். கல்வி பாதிப்பு, தேர்வு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று இந்த நடைமுறை இருக்கும். அந்த அடிப்படையில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் பல்வேறு திட்டங்களை போட்டு தயாராக இருந்த பெற்றோர்கள் இன்னும் விடுமுறை அறிவிப்பு இல்லாததால் குழப்பத்தில் உள்ளனர். பெற்றோரும் பள்ளிக்கூட விடுமுறை அறிவிப்பினை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

Next Story