வீடு கட்டுவதற்காக இரு பிரிவினருக்கு ஒரே இடத்தில் நிலம் ஒதுக்க எதிர்ப்பு; செங்கல்பட்டு கலெக்டர் ஆய்வு

பூஞ்சேரியில் வீடு கட்டுவதற்காக இரு பிரிவினருக்கு ஒரே இடத்தில் நிலம் ஒதுக்க எதிர்ப்பு எழுந்ததையடுத்து கலெக்டர் ராகுல்நாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீட்டு மனை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்த பூஞ்சேரியை சேர்ந்த அஸ்வினி என்ற பெண் அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்து அந்த பெண்ணின் குமுறல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து அந்த சமூக மக்களை ஆறுதல் படுத்தும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் வசிக்கும் மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதிக்கு நேரில் சென்று அங்கு ஒரே இடத்தில் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசிக்கும் அஸ்வினி சமூகத்தை சேர்ந்த 54 பேருக்கும், மற்றொரு சமூகத்தை சேர்ந்த 27 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தலா 11 பேர் என இரு சமூகத்தினர் 22 பேருக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தர நலத்திட்ட பட்டாவுடன் கூடிய அரசு ஆணை வழங்கினார்.
இடம் ஒதுக்க முடியாமல்...
இதையடுத்து பூஞ்சேரியில் ஒரே இடத்தில் இரு சமூகத்தினருக்கு மொத்தம் 22 வீடுகள் கட்டி தர சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்வதற்காக அங்கு ஆய்வுக்கு சென்றனர்.
அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட அஸ்வினியின் சமூகத்தை சேர்ந்தவர்கள், எங்கள் கலாசாரம் வேறு. அவர்கள் கலாசாரம் வேறு அதனால் எங்களுக்கு தனி இடத்தி்ல் வீடு கட்டி தரவேண்டும் என்றும், அவர்களுடன் எங்களை இணைக்க வேண்டாம் என்று ஆவேசமாக கூறி கூச்சலிட்டனர். இதனால் இரு தரப்பை சேர்ந்த 22 பேருக்கும் தேர்வு செய்யப்பட்ட இடத்தை அளவீடு செய்து இடம் ஒதுக்க முடியாமல் அதிகாரிகள் பாதியிலேயே அங்கிருந்து திரும்பி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த பிரச்சினையில் தீர்வு காண செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று பூஞ்சேரிக்கு வருகை தந்து ஒரே இடத்தில் வசித்து வரும் இரு சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள் தங்கள் இரு சமூகத்தினருக்கும் தனித்தனியாக வீடு கட்ட இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் அங்கு உள்ள அரசு புறம்போக்கு காலி இடங்களை நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறிக்கை வழங்குங்கள்
இரு தரப்பினருக்கும் தனித்தனியாக குடியிருப்புகள் கட்டி தர அங்குள்ள அரசு புறம்போக்கு இடங்களை அளவீடு செய்து தனக்கு அறிக்கை வழங்குமாறு வருவாய்த்துறையினருக்கும், பேரூராட்சி துறையினருக்கும் உத்தரவிட்டு சென்றார்.
இருதரப்பினரும் மாறி, மாறி இடம் பிரச்சினை தொடர்பாக குற்றச்சாட்டுகள் வைத்து கலெக்டரிடம் கோரிக்கை விடுத்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.
கலெக்டருடன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story






