அரசு பஸ் கண்ணாடி உடைப்பு; டிரைவருக்கு அடி-உதை

குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வாலிபரிடம் பஸ் செல்வதற்கு வழி விடுமாறு கேட்ட டிரைவரை அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றவரை போலீஸ் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பழனி (வயது 49). அதே பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டில் இருந்து அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் ரெயில்வே கேட் பாதையை பஸ் கடந்து செல்லும்போது சாலையின் குறுக்கே ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு பஸ் செல்வதற்கு வழிவிடாமல் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இதை பார்த்த பஸ் டிரைவர் பழனி கீழே இறங்கி சாலையின் நடுவில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வாலிபரிடம் பஸ் செல்வதற்கு வழி விடுமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சாலையோரமாக கிடந்த கருங்கல்லை எடுத்து பஸ் கண்ணாடி மீது வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. அந்த வாலிபர் டிரைவர் பழனியை அடித்து உதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து பழனி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டில்லிபாபு வழக்குப்பதிவு செய்து சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள தெள்ளிமேடு பரசுராமன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (22) என்பவரை கைதுசெய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். பஸ்சுக்கு வழிவிடாமல் அதை தட்டி கேட்ட டிரைவரை தாக்கி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்த சம்பவம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story






