இளம் வக்கீல்களை சிரமம் பார்க்காமல் மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும்; ஈரோட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு

இளம் வக்கீல்களை மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.
ஈரோடு
இளம் வக்கீல்களை சிரமம் பார்க்காமல் மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.
பாராட்டு விழா
ஈரோடு தி பார் அசோசியேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் 50 ஆண்டுகளாக வக்கீல் பணியாற்றி வரும் ஏ.சி.முத்துசாமி ஆகியோருக்கு பாராட்டு விழா ஈரோடு பழையபாளையத்தில் உள்ள சக்தி துரைசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு பார் அசோசியேசன் தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி பி.முருகேசன் வரவேற்று பேசினார்.
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கலந்துகொண்டு மறைந்த சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.
ஊக்கப்படுத்த வேண்டும்
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது கூறியதாவது:-
ஒருவரை பாராட்டுவது என்பது நல்ல விஷயம். மற்றவர்களை தூண்டுதலுக்கு பாராட்டுதல் முக்கியமாகும். கோர்ட்டில் வக்கீல்கள் வாதாடுவதற்கு நல்ல வழக்குகள் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது திறமை வெளிப்படும். ஐகோர்ட்டில் நீதிபதிகள் தேர்வுக்கு சென்னையில் உள்ள மூத்த வக்கீல்கள் மட்டுமின்றி மாவட்ட வாரியாக சிறந்த வக்கீல்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த நடைமுறை தற்போது தொடரப்பட்ட வக்கீல்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மூத்த வக்கீல்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவர்கள் இளம் வக்கீல்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதில் சிரமம் இருக்கலாம். ஆனால் சிரமம் பார்க்காமல் இளம் வக்கீல்களை ஊக்கப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்.
முழு ஈடுபாடு
விழாவில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசும்போது கூறியதாவது:-
மாவட்ட முதன்மை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள், பார் அசோசியேசன் உறுப்பினர்கள், கோர்ட்டு ஊழியர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள், ஊழியர்களின் கோரிக்கைகள், காலிப்பணியிடங்கள் போன்றவற்றை முதலிலேயே தெரிந்து கொள்ள முன்வர வேண்டும். வக்கீல்கள், ஊழியர்களை அடிக்கடி சந்தித்து பேசுவதன் மூலமாக கோர்ட்டில் உள்ள பிரச்சினைகள் எளிதாக தீர்க்கப்பட்டுவிடும். இதனை மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், ஆர்எம்டி.டீக்காராமன், என்.சதீஸ்குமார், எம்.தண்டபாணி, ஆர்.தாரணி, ஆர்.பொங்கியப்பன், டி.வி.தமிழ்செல்வி, மூத்த வக்கீல் ஏ.சி.முத்துசாமி ஆகியோர் பேசினார்கள். இதில் நீதிபதிகள், பார் அசோசியேசன் நிர்வாகிகள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் எஸ்.ஹரிகணேஷ் நன்றி கூறினார்.
சொந்த ஊர்
உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சுந்தரேசனின் சொந்த ஊர் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் மூலக்காடு புதூராகும். முன்னதாக நேற்று தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் எழுமாத்தூர் பொன்காளி அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும், கனககிரி மலையில் உள்ள கனகாசல குமரன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டார்.
Related Tags :
Next Story






