மாமல்லபுரம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மாமல்லபுரம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம்,
தற்போது உருமாறிய கொரோனா தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் என்ற புதிய ரூபத்தில் பரவி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மது விருந்துடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்களுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பின்புறம் உள்ள கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதிப்பட்டுள்ளது. அதேபோல் கடற்கரையில் கூட்டமாக கூடவும், கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கும் அனுமதி கிடையாது. கூட்டமாக வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாமல்லபுரத்தில் அறைகளில் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளவர்களின் வாகனங்கள் மட்டுமே சென்னையில் இருந்து மாமல்லபுரம் நகருக்கு வருவதற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு போலீஸ் சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகுதான் மாமல்லபுரம் வர அனுமதிக்கப்படுவார்கள். மது குடித்து விட்டு இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்படும்.
குறிப்பாக ஓட்டல்களில் தங்கும் விருந்தினர்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அமைதியான முறையில் தங்கள் அறைகளுக்குள்ளேயே புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்றும், ஓட்டலுக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து ரிசார்ட், விடுதி உரிமையாளர், மேலாளர்களையும் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் போலீசார் முன்பு விளக்கி கூறி இதனை அனைவரும் பின்பற்றுமாறு கேட்டு கொண்டார்.
அப்போது விதிமுறைகளை பின்பற்றாத விடுதி, ரிசார்ட் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். கூட்டத்தில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், மாமல்லபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக சக்கரவர்த்தி உள்ளிட்ட போலீசார் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story






