பவானிசாகர் அருகே எலிப்பெட்டியில் சிக்கிய அரிய வகை புளுகு பூனை

பவானிசாகர் அருகே எலிப்பெட்டியில் அரிய வகை புளுகு பூனை சிக்கியது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே உள்ள ஒப்பலவாடானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 51). வாழைக்காய் வியாபாரி. இவரது வீட்டின் அருகே எலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அவற்றை பிடிப்பதற்காக பெட்டி வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை எலிப்பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. இதனால் சவுந்தரராஜன் எலிப்பெட்டியை பார்த்தபோது அதில் கீரி போன்ற தோற்றமுடைய விலங்கு இருந்ததை கண்டார். அந்த விலங்கு எலி பெட்டியில் இருந்து வெளியே வருவதற்காக முயற்சித்தபடி அங்கும் இங்கும் பெட்டிக்குள் ஓடியது. இதுபற்றி அறிந்த கிராமமக்கள் அங்கு சென்று எலிப்பெட்டியில் சிக்கிய விலங்கை பார்த்து விட்டு சென்றனர்.
மேலும் இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில் எலி பெட்டியில் சிக்கிய விலங்கு அரிய வகையை சேர்ந்த புளுகு பூனை என்பது தெரியவந்தது. இதையடுத்து புளுகு பூனையை மீட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.
Related Tags :
Next Story






