ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்தே கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொளியால் ஜொலிக்க தொடங்கின.
ஆலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்புக்கான குடில் அமைக்கப்பட்டது. இதேபோல் கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு நட்சத்திரங்களை தொங்கவிட்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கான குடிலையும் வீடுகளில் அமைத்து இருந்தனர். இதேபோல் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அதில் குழந்தைகளுக்கான பரிசு பொருட்கள் தொங்கவிடப்பட்டு இருந்தது.
சிறப்பு பிரார்த்தனை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நள்ளிரவில் இயேசு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது குழந்தை இயேசு கிறிஸ்துவின் சொரூபம், திருப்பலி நடக்கும் இடத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் எடுத்துச்செல்லப்பட்டு ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட குடிலில் வைத்து ஜெபம் நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடிலில் உள்ள குழந்தை இயேசுவை தரிசித்து சென்றனர்.
வாழ்த்து
ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் ஆயர் ரிச்சர்ட் துரை தலைமையில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் ஈரோடு ரெயில்வே காலனி, கொல்லம்பாளையம், திருநகர் காலனி, பி.பி.அக்ரஹாரம், வெண்டிபாளையம், சூளை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு கேக் வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் ஏராளமானவர்கள் செல்போன் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






