ஈரோட்டில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: கொழுந்துவிட்டு எரிந்த கடைகள்; லட்சக்கணக்கில் பொருட்கள் நாசம் அதிகாலை வரை தீயை அணைக்க போராட்டம்

ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பிடித்து கடைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. லட்சக்கணக்கில் பொருட்கள் நாசமான இந்த விபத்தில் தீயை அணைக்க அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பிடித்து கடைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. லட்சக்கணக்கில் பொருட்கள் நாசமான இந்த விபத்தில் தீயை அணைக்க அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள்.
கட்டுமான பொருட்கள்
ஈரோடு பஸ் நிலையம் அருகில் சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் 4 கடைகள் வரிசையாக உள்ளன. இந்த கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் பொருட்கள், குளியலறை-கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் நேற்று இரவு விற்பனை முடிந்த பிறகு ஊழியர்கள் கதவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கொழுந்துவிட்டு எரிந்தது
தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே கடைகளில் தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. விண்ணை முட்டும் அளவுக்கு கொழுந்துவிட்டு தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. இதனால் மேற்கொண்டு 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
அவர்கள் கடைகளின் கதவுகளை உடைத்து தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் வராமல் எரிந்தது.
பொதுமக்கள் திரண்டனர்
மேலும் தீ மளமளவென அருகே உள்ள கடைகளுக்கும் பரவி கொண்டிருந்ததால் தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவால் ஏற்பட்டது. தீயை அணைக்க அதிகமான தண்ணீர் தேவைப்பட்டதால் தனியார் வாகனங்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பவானி, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க திரண்டனர். தகவல் அறிந்து ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்களை மீட்கும் வகையில் 2 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மரக்கட்டைகள்
தீ விபத்து ஏற்பட்ட கடைகளுக்கு அருகில் மர வேலை செய்யும் கடைகளும் உள்ளன. அங்கும் தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். ஆனால் அந்தப் பகுதியிலும் தீ பரவியது. இதனால் 2 மர கடைகளில் உள்ள மரச்சாமான்கள் எரிந்து நாசமானது.
தீயை கட்டுக்குள் கொண்டுவர அதிகாலை வரை தீயணைப்பு வீரர்கள் போராடினார்கள். இந்த பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள கட்டுமான பொருட்கள் கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






