சைக்கிளில் செல்பவர்களுக்காக ஏற்பாடு; கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை முதல் முட்டுக்காடு வரை தனிவழி பாதை


சைக்கிளில் செல்பவர்களுக்காக ஏற்பாடு; கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை முதல் முட்டுக்காடு வரை தனிவழி பாதை
x
தினத்தந்தி 26 Dec 2021 2:53 PM IST (Updated: 26 Dec 2021 2:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவை தொடர்ந்து, சைக்கிளில் செல்பவர்களுக்காக கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரை தனிவழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வோர்களின் பாதுகாப்புக்காகவும், வாகனங்களின் வேகத்தால் பயமின்றி உடற்பயிற்சி மேற்கொள்ளவும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்காக பாதுகாப்பான வழி அமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், சென்னை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து, கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான சுமார் 12 கி.மீ. தூர பாதையில் தற்காலிகமாக சைக்கிள் பயணம் மேற்கொள்ள தனி பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

அதன்படி, நேற்று காலை 5 மணி முதல் 8 மணி வரை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான தனிவழி பாதையில் சென்னை போலீசார், ஆயுதப்படை விளையாட்டு பிரிவை சேர்ந்த 40 போலீசார் மற்றும் 150 பொதுமக்களுடன் சைக்கிள் பயணம் சோதனை ஓட்டம் நடந்தது.

அப்போது, முட்டுக்காடு முதல் அக்கரை வரையிலான இதே வழித்தடத்தில் இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அடையாறு துணை கமிஷனர் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் (தெற்கு) தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் இனிதே நடந்தது.

சென்னை போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின்படி சைக்கிள் பயணம் பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் நடந்ததாகவும், வாகனங்களின் இடையூறு இல்லாமல் வேகமாகவும் சிறந்த முறையில் பயிற்சி மேற்கொண்டதாகவும், இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், சைக்கிள் பயணத்தில் பங்குபெற்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இதே வழித்தடத்தில் மீண்டும் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெறும். இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 5 மணி முதல் 8 மணி வரை அக்கரை முதல் முட்டுக்காடு வரையில் சைக்கிள் பயணத்துக்கான தற்காலிக ஒரு வழிபாதை அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளது.
1 More update

Next Story