தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்வரை ஓயக்கூடாது

கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும் வரை ஓயக்கூடாது என்று மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
கோவை
கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும் வரை ஓயக்கூடாது என்று மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நடந்த முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் கோவை மக்கள் மட்டும் காலை வாரி விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் எஸ்.பி.வேலுமணி போன்றோர் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து, அதனை வாக்காக மாற்றினார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்தவர்கள் உள்ளே செல்வார்கள் என்று கூறினார். அதன்படி விரைவில் எஸ்.பி.வேலுமணி உள்ளே செல்வது உறுதி.
கொரோனா நிவாரண நிதி
கோவையில் அ.தி.மு.க. வென்றதற்கு பணம் ஒரு காரணமாக இருந்தாலும் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பதாகவே நான் நினைக்கிறேன். இங்கே பேசும்போது சிலர் தேர்தலில் சரியாக பணியாற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதுகுறித்து தி.மு.க. தலைவரிடம் எடுத்து கூறப்படும். ஆட்சி பொறுப்பேற்றதும் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ஆவின் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு, கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
நாங்கள் என்ன பிரசாரம் செய்தாலும் மக்களோடு தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள்தான்.தமிழ்நாட்டிலேயே முதல்-முறையாக பூத் கமிட்டி முகவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மினிட் புத்தம் வழங்கி உள்ளார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் மற்றும் மாவட்டம் முழுவதும் 800 நகர்ப்புறஉள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். கோவை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்தவரை அமர வைக்க நீங்கள் பணியாற்ற வேண்டும். மேயர் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவராக தி.மு.க. உறுப்பினரை அமர வைப்போம் என்று நீங்கள் அளித்த உறுதி மொழியை மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பேன்.
கோவையில் தங்கி பணியாற்றுவேன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் கோட்டை விட்டாலும், கோட்டையை பிடித்தோம். வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வெற்றி கனியை கொடுப்பீர்கள் என்றால், நான் மாதத்தில் 10 நாட்கள் கூட கோவையில் தங்கி பணியாற்றுவேன். கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும் வரை நாம் ஓயக்கூடாது.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து அவர் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு மினிட் புத்தகத்தை வழங்கினார். பின்னர் வருகிற 9-ந் தேதி கோவையில் நடைபெற உள்ள ஜல்லிகட்டு போட்டியை முன்னிட்டு லட்சினையை அவர் வெளியிட்டார். கூட்டத்தின் போது ஏராளமான சிறுவர்கள், சிறுமிகள் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொண்டனர்.கூட்டத்தில் தி.மு.க. பொறுப்பாளர்கள் நா.கார்திக் (மாநகர் கிழக்கு), பையா என்கிற கிருஷ்ணன் (மாநகர் மேற்கு), சி.ஆர். ராமச்சந்திரன் (கோவை வடக்கு), மருதமலை சேனாதிபதி (கோவை கிழக்கு), வரதராஜன் (கோவை தெற்கு), ஜெயராமகிருஷ்ணன் (திருப்பூர் தெற்கு), இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சண்முக சுந்தரம், துணைத்தலைவர் புருஷோத்தமன், துணை செயலாளர்கள் கிருஷ்ணசாமி, பூபதி, ரவி, ராஜசேகர், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






