கறிக்கோழி நுகர்வு குறைந்ததால் பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சி

கறிக்கோழி நுகர்வு குறைந்ததால் பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி
கறிக்கோழி நுகர்வு குறைந்ததால் பண்ணை கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கறிக்கோழி உற்பத்தி
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி ஆகிய வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையானது கறிக்கோழி நுகர்வு ஏற்றம் மற்றும் இறக்கத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது.
விலை வீழ்ச்சி
தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 வரை செலவாகிறது. ஆனால் கடந்த 18, 19-ந் தேதிகளில் ரூ.99 ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை(உயிருடன்) 21-ந் தேதி ரூ.93, 24-ந் தேதி ரூ.88 ஆக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கிலோவிற்கு ரூ.12 நஷ்டத்தை உற்பத்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
கிலோவுக்கு ரூ.12 நஷ்டம்
கோழித்தீவனம் விலை உயர்வால் தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய செலவு ரூ.100 ஆக உள்ளது. மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அவ்வப்போது பெய்து வரும் மழை, மார்கழி மாதம், சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் உள்ளிட்டவை காரணமாக கறிக்கோழி நுகர்வு தொடர்ந்து சரிந்து பண்ணை கொள்முதல் விலையும் குறைந்து வருகிறது.
தற்போது பண்ணை கொள்முதல் விலை ரூ.88 ஆக உள்ளதால் கிலோவிற்கு ரூ.12 வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். தீவன விலை உயர்ந்து உள்ள நிலையில் குறைந்தபட்சம் பண்ணை கொள்முதல் விலை ரூ.120 ஆக இருந்தால் மட்டுமே கட்டுபடியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது இறைச்சி கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.190 முதல் ரூ.210 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருசில கடைகளில் விலைமாறுபடுகிறது.
Related Tags :
Next Story






