தினத்தந்தி புகாா் பெட்டி

தினத்தந்தி புகாா் பெட்டி
கழிப்பறை பராமரிக்கப்படுமா?
பவானி சோமசுந்தரபுரம் பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் உள்ள கதவுகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் அந்த கழிப்பறையில் மின் விளக்குகளும் இல்லை. தண்ணீர் செல்லவும் முறையான வசதி கிடையாது. எனவே கழிப்பறையை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பவானி.
கால்வாயை சீரமைக்க வேண்டும்(படம்)
சிவகிரி பேரூராட்சி 18-வது வார்டுக்கு உள்பட்டது காந்திஜி தெரு. இங்கு கடந்த 10 ஆணடுகளுக்கு மேலாக சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. உடனே சாக்கடை கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.சசி, சிவகிரி.
வீணாகும் குடிநீர்
அரசூர் ஆற்றில் இருந்து கிணறு மூலமாக பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் பல நாட்களுக்கு முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீரானது ஆற்றுக்குள்ளேயே வீணாக செல்கிறது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரசூர்.
ரோட்டில் செல்லும் கழிவுநீர்
மொடக்குறிச்சியை அடுத்த அய்யா கவுண்டம்பாளையம் பகுதியில் சாக்கடை வடிகால் இல்லை. இதனால் சாக்கடை கழிவுநீர் அங்குள்ள ரோட்டில் தேங்கி மறுபுறம் பாய்ந்து செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சில நேரங்களில் சாலையில் விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அய்யா கவுண்டம்பாளையம்.
ஆபத்தான குழி
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் செல்லும் ரோட்டில் ஆபத்தான குழி உள்ளது. இதனால் இந்த குழியில் பலர் விழுந்து விடுகிறார்கள். இதை பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் அந்த குழியை மண்ணால் மூடி அதில் பொதுமக்கள் விழுந்து விடாதபடி மரக்கிளையை வைத்து உள்ளனர். எனவே ஆபத்தான குழியை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
ஆபத்தான மின் கம்பம்
வெள்ளோடு அருகே உள்ள செல்லப்பம்பாளையம் நல்லிக்காட்டுத்தோட்டம் பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் அந்த மின் கம்பத்தை மாற்ற மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், செல்லப்பம்பாளையம்.
பாராட்டு
பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் ரோட்டில் உள்ளது பெருந்துறை ஆர்.எஸ்.நுழைவுபாலம். இந்த பாலத்தின் சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது பாலத்தின் சாலை சீரமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்டு் உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டு்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கவுரிசங்கர், அறச்சலூர்.
Related Tags :
Next Story






