ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் பயங்கர தீ விபத்து: ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் எரிந்து நாசம்

ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
ஈரோடு
ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்த 4 கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2½ கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
கட்டுமான பொருட்கள் கடை
மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 57) மற்றும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்த ஸ்ரீதர் (47) ஆகியோருக்கு, ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோடு பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடோன் உள்ளது.
இந்த கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் மின்சாதன பொருட்கள், குளியலறை- கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
கரும்புகை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் விற்பனை முடிந்த பின்னர் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 11 மணி அளவில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து ‘குபுகுபு’வென கரும்புகை வெளியேறியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொழுந்து விட்டு எரிந்தது
இதற்கிடையில் அடுத்தடுத்த கடைகளிலும் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் கடைகளின் கதவை உடைத்து உள்ளே சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதைத்தொடர்ந்து பவானி, பெருந்துறை, பள்ளிபாளையம் போன்ற பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள், தனியார் தண்ணீர் டேங்கர் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால், அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. கடைகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.
6 மணி நேர போராட்டம்
தீ விபத்து ஏற்பட்ட கடைகளுக்கு அருகில் அவர்களுக்கு சொந்தமான மர பொருட்கள் செய்யும் கடைகள், குடோன்களுக்குள் தீ பரவியதால், அந்த பகுதியிலும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். எனினும் 2 மர குடோன்களில் இருப்பு வைத்திருந்த மரங்கள், மர பொருட்கள் செய்ய பயன்படும் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தது. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் காலை 9 மணி வரை புகை வெளியேறியதால், தீயணைப்பு வாகனம் ஒன்று அங்கேயே நிறுத்தப்பட்டு, தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
ரூ.2½ கோடி...
இந்த தீ விபத்தில் 3 கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், ஒரு மரக்கடை, 2 குடோன்கள் ஆகியவற்றில் இருந்த சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு பஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 4 கடை மற்றும் குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story






